செந்துறையை மையமாக கொண்டு முந்திரி கொட்டை, பழச்சாறு தொழிற்சாலை அமைக்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் : செந்துறையை மையமாகக்கொண்டு முந்திரிக்கொட்டை, பழச்சாறு தொழிற்சாலை அமைக்க கோரி விவசாயிகள் முந்திரிக்கொட்டையை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.உடையார்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய பகுதிகளை மையமாகக்கொண்டு முந்திரி கொட்டை, பழச்சாறு தொழிற்சாலை, கடலை மண்டி அமைக்க வேண்டும். சுத்தமல்லி பகுதியில் கடலை மண்டி அமைக்க வேண்டும். வேளாண்மை துறை தோட்டக்கலை துறை பொறியியல் துறை ஆகியவற்றில் உள்ள திட்டங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், டாப்செட்கோ மூலம் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிதாக பயிர் கடன் வழங்க வேண்டும்.

இலவச மின் இணைப்பு தட்கல் முறையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். பிலாக்குறிச்சி கிராம பகுதியில் துணை மின் நிலையம் அமைத்து விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்றக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக அரியலூர் மாவட்ட தலைவர் பரமசிவம் வரவேற்றுப் பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் பழனிசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கங்காதுரை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். இறுதியில் உடையார்பாளையம் நகர தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Related Stories: