கிருஷ்ணா நதிநீர் பங்கீடு வழக்கு சமரசத்துக்கு ஆந்திரா மறுப்பு: தலைமை நீதிபதி விலகல்

புதுடெல்லி: கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஆந்திரா சீரமைப்பு சட்டம் 2014ன் கீழ் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதன்படி, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் கிருஷ்ணா நதிநீரை பங்கிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தெலங்கானா மாநில அரசு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்றாமல், தங்களை ஏமாற்றி விட்டதாக ஆந்திர மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, `நான் இரு மாநிலங்களையும் சேர்ந்தவன். இப்பிரச்னைக்கு குழு அமைத்து தீர்வு காண பரிந்துரைக்கிறேன்,’ என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமரசத்துக்கு ஆந்திர அரசு தயாராக இல்லை என அம்மாநில தரப்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார். இதனால், வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக கூறிய தலைமை நீதிபதி ரமணா, வேறு அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார்.

Related Stories: