பெரியபாளையம் கோயில் அருகில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் கோயில் அருகில் உள்ள ஆக்ரமிப்பு கடைகள் அகற்றியபோது, வியாபாரிகள் போலீசாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கார்,  பஸ், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.இந்நிலையில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்தில் சிலர் கடைகளை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை அகற்ற வேண்டும் என பெரியபாளையம் கோயில் பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 வாரத்தில் ஆக்கிரமிப்பு  கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.  

அதன்பேரில், இந்து சமய அறநிலையதுறை துணை ஆணையர் சுப்பிரமணி தலைமையில் டிஎஸ்பிக்கள் சாரதி மற்றும் சந்திரதாசன் ஆகியோர்  ஆக்கிரமிப்பு கடைகைளை அகற்றினர். அப்போது, ‘வியாபாரிகள் எங்களுக்கு முன்னெச்சரிக்கையாக முறையாக நோட்டீஸ் அனுப்பாமல் திடீரென காலி செய்யகூடாது’ என்றனர். இதனால், போலீசாருக்கும் வியாபாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர், அதிகாரிகள் கோர்ட் நோட்டீசை வியாபாரிகளிடம் காட்டினர். பின்னர், ‘வியாபாரிகள் நாங்களாகவே கடையை பிரித்து எடுத்துக்கொள்கிறோம்’ என்றனர்.

பின்னர், வியாபாரிகளே கடைகளை பிரித்து எடுத்துக்கொண்டனர். வியாபாரிகள் இரவு 7 மணிக்கு தங்களுக்கு கடைப்பகுதியில் சிறு இடமாவது ஒதுக்கி கொடுங்கள் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: