நடமாடும் வாகனம் மூலம் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் 6 நாட்களில் நடமாடும் வாகனம் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசு, கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் விலையில்லாமல் வழங்கி வருகிறது. மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காச நோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் கடந்த மாதம் 29ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 29.6.2021 முதல் 3.8.2021 வரை நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் மூலம் 2,477 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 610 கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 3,087 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>