இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை, உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் கட்சி தலைமை இந்த விஷயத்தில் ஒரு இறுதி முடிவை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் உள்ள அதிமுக செயலாளர்களுக்கு இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் மற்ற அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சி தலைமை நிர்வாகிகள் ஆலோசனை நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், இன்று நடைபெற இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ”அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால் இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் நடத்தப்பட இருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு நாளில் இந்த கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Related Stories: