தீரன் சின்னமலை நினைவு நாள் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை ெசலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அதிமுக சார்பில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை உருவச் சிலையின்கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் சார்பில் ஈ.வே.ரா.திருமகன் எம்எல்ஏ தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட தலைவர்கள் முத்தழகன், எம்.பி.ரஞ்சன் குமார், நாஞ்சில் பிரசாத், அடையார் துரை, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை பிரிவின் மாநில துணை தலைவர் மயிலை தரணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழக பாஜ சார்பில் முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பொதுச்செயலாளர் கருநாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனிடையே அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ‘‘வெள்ளையனை கலங்கடித்த மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு தினமான இன்று (நேற்று) அவருக்கு எங்களது வீரவணக்கம்’’ என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி மரியாதை: சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் நினைவுநாளையொட்டி நேற்று, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள ஓடாநிலையில் மணிமண்டபத்தில் உள்ள தீரன்சின்னமலையின் உருவ படத்திற்கும், சிலைக்கும் அதிமுக சார்பில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: