85 நாள் மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை ரிவால்டோ யானை சிக்கல்லா வனத்தில் விடுவிக்கப்பட்டது

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வாழைத்தோட்டம், மசினகுடி உள்ளிட்ட  பகுதிகளில் தும்பிக்கையில் குறைபாடுடன் உலா வந்த ரிவால்டோ என்ற காட்டு யானையை பிடித்து தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு சென்று முகாம் யானையாக மாற்றி பராமரிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இந்த யானையை கால்நடையாக முகாமிற்கு அழைத்து செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது.பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் செய்யாமல் உலா வரும் ரிவால்டோ யானையை, முகாமிற்கு கொண்டு செல்ல தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சுற்றுசூழல் ஆர்வலர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணையில், ரிவால்டோ யானையை முகாமில் வைத்து வளர்ப்பு யானையாக பராமரிக்க அனுமதி மறுத்த நீதிபதிகள், மருத்துவ சிகிச்சைக்காக பிடிக்கும் பட்சத்தில் தும்பிக்கையில் ஏற்பட்டுள்ள குறைபாடு, பார்வை குறைபாடு ஆகியவற்றிற்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின் மீண்டும் வனப் பகுதியிலேயே விடுவிக்க வேண்டும் என வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து யானை பிடிக்கப்பட்டு மசினகுடி சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்ட மரக்கூண்டில் அடைக்கப்பட்டு கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை மீறி அதனை பழக்கப்படுத்தி அதனை தெப்பக்காடு முகாமிற்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அதன் உடல்நிலையை கண்காணிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் ஆர்வலருமான மேனகா காந்தியும், சிகிச்சைக்கு பின் ரிவால்டோ யானையை விடுவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இந்த சூழலில் தலைமை முதன்மை வன பாதுகாவலர் அனுமதியின் பேரில் ரிவால்டோ யானைக்கு சில நாட்கள் முன் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. பின்னர் யானையை வனப்பகுதியில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் 85 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை 2 மணியளவில் மரக்கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ரிவால்டோ யானை, கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு சிக்கல்லா கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வன பாதுகாவலர் சேகர் நீரஜ், முதுமலை கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று அதிகாலை சிக்கல்லா வேட்டைதடுப்பு காவலர்கள் முகாமிற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் யானை விடுவிக்கப்பட்டது. கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல் கூறுகையில்,   அடர் வனத்தில் விடுக்கப்பட்ட யானையின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பசுந்தீவனங்கள் அதிகம் உள்ள பகுதி. இயற்கை நீராதாரங்கள் உள்ளன. யானை தற்போது சாதுவாகவும், நல்ல உடல்நலத்துடன் உள்ளது. விடுவிக்கப்பட்டவுடன் அங்குள்ள சேற்றில் இறங்கி மண் குளியல் போட்டது. அதன் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் உதவியுடன் 24 மணி நேரமும் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.தமிழகத்தில் முதன் முறையாக மரக்கூண்டில் அடைத்து சிகிச்சையளிக்கப்பட்ட யானை நேற்று வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: