தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று ஆடி 18 கொண்டாட பொதுமக்கள் காவிரி கரைக்கு வரவேண்டாம்: மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

திருச்சி: திருச்சியில் தடை விதிப்பு காரணமாக ஆடி 18 கொண்டாட பொதுமக்கள் யாரும் காவிரி கரைக்கு வரவேண்டாம் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து திருச்சி மாநகர காவல்ஆணையர் அருண் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முழு ஊரடங்கு வரும் 9ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு அமலில் உள்ளது.திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் 27 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் அரசு உத்தரவை மீறிபவர்களை தடுக்க சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது தொடர்பாக நேற்று குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு சார்பாக அண்ணாசிலை ரவுண்டானாவில் சிறப்பு வாகன சோதனை மையம் அமைக்கப்பட்டு, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசின் தடை உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் 911 க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 81 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.5 லட்சம் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலின் காரணமாக இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, வடக்கு வாசல் (கொள்ளிடம் ஆறு), தில்லைநாயகம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கீதாபுரம் படித்துறை மற்றும் ஒடத்துறை ஆகிய படித்துறைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் காவிரியாற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் காவிரியாற்றின் கரைகளில் வழிபாடு செய்வதற்கு வர வேண்டாம், எதிர்வரும் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த தற்போதிலிருந்து பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: