பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீது தொடரப்பட்ட வழக்கை தினசரி விசாரிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் புகார் வழக்கை டிசம்பர் 20ம் தேதிக்குள் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு வழக்கை நடத்தி வருகிறது. இந்த வழக்கை நீதிபதி அனந்த வெங்கடேஷ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.என்.முகமது ஜின்னா, வழக்கில் 122 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும், 72 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.க்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜெயராமன், குணசேகரன், வருண் குமார் ஆகியோருக்கு எதிராக துறைரீதியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதில் சிறப்பு டி.ஜி.பி. மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி அனந்த வெங்கடேஷ், விழுப்புரம் தலைமை மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் வழக்கை நாள்தோறும் விசாரித்து டிசம்பர் 20ம் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று காலக்கெடுவை விதித்துள்ளார்.

தகுதியின் அடிப்படையில் வழக்கை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் ஏதும் இந்த வழக்கு விசாரணையின் போது பொருந்தாது என்றும் எனவே வழக்கினை சுதந்திரமாக நடத்தலாம் என்றும் கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதி அனந்த வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார். கீழமை நீதிமன்றத்திற்கு ஏதேனும் கால அவகாசம் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் டிசம்பர் 23ம் தேதி இந்த வழக்கின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.

Related Stories: