பெரியபாளையம் கோயில் மூடல் வேப்பமரத்தை சுற்றி பக்தர்கள் வழிபாடு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா ஒவ்வொரு வருடமும்  ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி அல்லது 17ம் தேதி தொடங்கி, அடுத்த 10 வாரங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ,  மாட்டுவண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் ஆண்டுதோறும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருவது வழக்கம்.  இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சுறுத்தல்  காரணமாக நேற்று முதல் வரும் 3ம் தேதி வரை கோயில்  மூடப்பட்டிருக்கும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாததால், கோயிலின் பின்புறம் உள்ள வேப்ப மரத்திலும், புற்று பகுதிகளிலும் குவிந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

Related Stories: