வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.74 அதிகரிப்பு: சென்னையில் ரூ.1757 ஆனது

சேலம்: இம்மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.74 அதிகரிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. இந்த மாதத்திற்கான (ஆகஸ்ட்) காஸ் சிலிண்டர் விலையை நேற்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. டெல்லி, மும்பையில் ரூ.834 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.861 ஆகவும், சென்னையில் ரூ.850.50 ஆகவும் விற்கப்படுகிறது.

சேலத்தில் ரூ.868.50 ஆக நீடிக்கிறது. அதேவேளை, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.74 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கடந்த மாதம் ரூ.1683க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர், ரூ.1757 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் ரூ.1645ல் இருந்து ரூ.73.50 அதிகரித்து, ரூ.1718.50 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.73 முதல் ரூ.80 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 5 நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் வர்த்தக சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: