சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் தேசிய புலிகள் தினம் கொண்டாட்டம்

ஊட்டி: சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம், தேசிய பசுமைப்படை இணைந்து வாழைத்தோட்டம் ஜிஆர்ஜி., பள்ளியில் புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் குமரன் வரவேற்று பேசுகையில், மசினகுடி பகுதி மக்கள் வனவிலங்குகள் காடுகளின் அறிவை நேரடியாக கிடைக்கப் பெற்றுள்ளனர். வனப்பகுதிகளில் பயன்களும் பாதுகாக்கும் அவசியம் குறித்து மாணவர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது பாதுகாப்பிற்கான நம்பிக்கை அளிப்பதாக உள்ளது, என்றார். சிபிஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமாரவேலு தலைமை வகித்து பேசுகையில், உலகின் 70 சதவிகித புலிகளைக் கொண்ட இந்திய தேசம் வளமையான இயற்கை வளங்களை கொண்டது.

அதிலும் முதுமலை புலிகள் பாதுகாப்பு வனப் பகுதி மக்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக உள்ளது. இவற்றின் பாதுகாப்பிற்கு நீடித்த இயற்கை வளங்களை நிலைநிறுத்த மக்களிடமும் அதிக இயற்கை கல்வி எடுத்துச் செல்வது அவசியம், என்றார். தேசிய பசுமைப்படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் பேசுகையில், நாட்டில் 50 புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரம் சதுர கிலோமீட்டர் வனப்பகுதிகள் கொண்டுள்ளது. தேசத்தின் மிகச் சிறந்த புலிகள் காப்பகமாக முதுமலை புலிகள் காப்பகாத்தை மத்திய வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகத்திற்கு கிடைத்துள்ள மகத்தான அங்கீகாரமாக உள்ளது. இந்த செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாக மக்களின் பங்களிப்பு உள்ளது. மேலும், மாவட்டத்தின் ஊடகங்கள், வனத்துறை தன்னார்வ அமைப்புகள், நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப்படை பள்ளிகளின் பங்களிப்பு போன்ற அனைத்து இயற்கை ஆர்வலர்களின் ஒத்துழைப்பு காரணமாக உள்ளது. வரும் காலத்தில் வளமையான வனங்களின் வளங்களை எடுத்துச் செல்லும் பொறுப்பு இளைய தலைமுறையினரிடம் அதிகம் உள்ளது. மேலும், புலிகள் பாதுகாப்பு அறிவியல் பூர்வமான செயல்பாடுகள் மாணவ சமுதாயம் முன்னெடுப்பது காலத்தின் அவசியம், என்றார். முடிவில் ஆசிரியர் ஆல்துரை நன்றி கூறினார்.

Related Stories: