வெளிநாடுகளில் உள்ள தமிழக கோயில்களின் சிலைகளை மீட்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை மீட்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வில்லிவாக்கம் தேவி பாலியம்மன் கோயில், சௌமிய தாமோதர பெருமாள் கோயில், அகத்தீஸ்வர சுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேரில்ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் ஹரிப்பிரியா, செயல் அலுவலர்கள் அன்புக்கரசி, ரேணுகா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது. கோயில் தெப்பக்குளம், திருத்தேர் சீரமைக்கப்படும். தேவி பாலியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற விரைவில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்படும். சௌமிய தாமோதர பெருமாள் கோயில் முகப்பில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். திருக்குளம், திருத்தேர் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அங்குள்ள நந்தவனம் சீரமைக்கப்படும். அகத்தீஸ்வர சுவாமி. கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம்  சீர்செய்ய  திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வாழ்வாதாரம் இல்லாதவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தமிழக கோயில்களுக்கு சொந்தமான சிலைகளை மீட்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: