சட்டமன்ற நூற்றாண்டு விழா - கலைஞர் படம் திறப்பு டெல்லியில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து சபாநாயகர் அழைப்பு

சென்னை: சட்டமன்ற நூற்றாண்டு விழா - கலைஞர் உருவ படத்தை திறந்து வைக்க வருகை தர உள்ள ஜனாதிபதியை தமிழக சபாநாயகர் அப்பாவு டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து விழா அழைப்பிதழ் வழங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையிலும், திமுக தலைவர் கலைஞரின் உருவ படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்கும் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தி தர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

முதல்வரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 2ம் தேதி (நாளை) காலை தமிழகம் வருகிறார். அன்று மாலை 5 மணிக்கு, சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்று சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் படத்தை திறந்து வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழக அரசு நடத்தும் இந்த விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக தமிழக சபாநாயகர் மு.அப்பாவு சென்னையில் இருந்து டெல்லி சென்றார். அவர் நேற்று காலை 11.30 மணிக்கு, ஜனாதிபதியை அவரது மாளிகையில் சந்தித்து விழா அழைப்பிதழை கொடுத்து, விழாவுக்கு நேரில் அழைத்தார்.

இதையடுத்து சபாநாயகர் மு.அப்பாவு டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பற்கேற்பது பெருமையாக இருப்பதாகவும், நேரில் வருவதாகவும் இந்திய ஜனாதிபதி உறுதியளித்தார்.தமிழ்நாட்டின் வாழ்வாதாரம், கலாச்சாரம் இந்தியா முழுமைக்கும் தேவையான ஒன்று என்பதால் அவை சார்ந்த `THE DRAVIDIAN MODEL’ என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினேன். சென்னை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனினும், கொரோனா காலம் என்பதால் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்க கூடிய சூழலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories:

>