திருவிடந்தையில் சாட்டிலைட் சிட்டி ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவிடந்தையில் சாட்டிலைட் சிட்டி அமைப்பதற்காக ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்போரூர் தாலுகா திருவிடந்தையை சேர்ந்த ஜி.ராஜா மற்றும் கே.சுந்தர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்போரூர் தாலுகாவில் திருவள்ளிகுட்டை, அம்பாள் ஏரி ஆகிய 2 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை நம்பியே திருவிடந்தை கிராம விவசாயிகள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 43.68 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. எனது விவசாய நிலமும் இந்த ஏரியை நம்பியே உள்ளது. கடந்த 2018ல் சென்னையை சேர்ந்த அரிஹந்த் ஹோம்ஸ் என்ற நிறுவனம் ஏரிகளின் நடுவில் சாலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. பொதுமக்கள் அதை தடுத்துவிட்டனர்.

தற்போது இந்த ஏரிகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால் அந்த நிறுவனம் மீண்டும் ஏரியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஏரியில் சாலை அமைக்கும் வேலைகள் நடந்தன. மீண்டும் பொதுமக்கள் எதிர்ப்பால் அந்த பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் மற்றும் நகர நிர்வாக ஆணையர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தோம். உலகத்தரம் வாய்ந்த சாட்டிலைட் நகரை அமைக்க அரிஹந்த் நிறுவனம் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலித்த நகர நிர்வாக ஆணையர் மற்றும் மாமல்லபுரம் திட்ட அதிகாரி பரிந்துரையின் அடிப்படையில் 60 அடி சாலை அமைக்க வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை 2017 ஜூலை 17ல் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏரியில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி 2020 ஜூன் 5ம் தேதி முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஏற்கனவே சாட்டிலைட் சிட்டி அமைக்க போதுமான சாலை வசதி உள்ள நிலையில் வணிக நோக்கத்திற்காக விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஏரியில் சட்ட விரோதமாக சாலை அமைக்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும்  சாட்டிலைட் நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

Related Stories:

>