அதிமுக ஆட்சியில் தரிசு நிலத்திற்கு பயிர் கடன் நகைக்கடன் வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

சேலம்:  சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. தலைமை வகித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ரேஷன் கடைகளில் 3,997 விற்பனையாளர், எடையாளர் காலிப்பணியிடங்கள் உள்ளது. அவற்றை விரைவில் நிரப்பவுள்ளோம். 4,451 வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு புகாரின் பேரில் நடந்து வரும் ஆய்வு 31ம் தேதி (நாளை) முடிகிறது. எதுவுமே பயிரிடப்படாத தரிசு நிலத்திற்கும் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் எத்தனை பேருக்கு, எத்தனை கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.

 கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியிலோ, சம்பந்தப்பட்ட சொசைட்டியிலோ பணம் இல்லை. ஆனால் நகைக்கடன் கொடுக்கப்பட்டதாக கணக்கு இருக்கிறது. நகையை அடகு வைத்து, அந்த தொகையை வைப்புநிதியாக கணக்கில் கொண்டு வந்துள்ளனர். 11 சதவீத வட்டிக்கு நகையை அடகு வைத்து, 7 சதவீத வட்டி பெறும் வகையில் வைப்புநிதியாக டெபாசிட் செய்திருக்கிறார்கள். இந்த வகையில் ரூ.400 முதல் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. பணம் மதிப்பிழப்பின்போது கூட்டுறவு வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மாற்றப்பட்டது தொடர்பாக விஜிலென்ஸ், சிபிஐ விசாரணை நடந்துள்ளது. அதில் நடந்த முறைகேடு பற்றி ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

Related Stories: