கடன் தொல்லையை சமாளிக்க நண்பன் மனைவியை கொலை செய்து நகைகளை பறித்து சென்றவர் கைது: போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக சடலம் மீது மிளகாய் பொடி தூவினார்

சென்னை:  காசிமேடு, காசிமா நகர், 1வது தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் 3வது தளத்தில் வசிப்பவர் மைக்கேல் நாயகம். மீனவர். இவரது மனைவி அந்தோணி மேரி (60). தம்பதியின் மகள், மகனுக்கு திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், மைக்கேல் நாயகம் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். அப்போது, அந்தோணி மேரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்ேதாணி மேரிக்கு அவரது மகள் போன் செய்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாக போனை எடுக்காததால், வீட்டுக்கு நேரில் வந்தார்.

 அங்கு, அந்தோணி மேரி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து, மகள் அதிர்ச்சியடைந்தார். உடனே இதுபற்றி காசிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சகாயம் அலெக்ஸ் (42), அடிக்கடி அந்தோணி மேரி வீட்டிற்கு வந்து சென்றது தெரிந்தது. சந்தேகத்தின் பேரில், அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அந்ேதாணி மேரியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது:

எனது சொந்த ஊர் கேரளா. நான், எனது மனைவி மற்றும் தாயுடன் காசிமேடு பகுதியில் வசித்து வருகிறோம். மைக்கேல் நாயகத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு செல்வேன். இதன் மூலம் அவருடன் நட்பு ஏற்பட்டதால், அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து செல்வேன். அப்போது, அந்தோணி மேரி பழக்கமானார். நான், பலரிடம் கடன் வாங்கி, அதை திருப்பி கொடுக்காததால், பணம் கொடுத்தவர்கள் எனது வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். இதனால், எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. விரக்தியில் மனைவி, கேரளாவுக்கு சென்று விட்டார். கடன் பிரச்னையை சரிசெய்ய வழியில்லாததால் திருட முடிவு செய்தேன்.

சம்பவத்தன்று காலையில் மைக்கேல் நாயகம் வீட்டுக்கு சென்றேன். அந்தோணி மேரி மட்டும் தனியாக இருந்ததால், அவரது கழுத்தில் கிடந்த நகைகளை பறிக்க திட்டமிட்ேடன். அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டே, திடீரென துணியால் கழுத்தை  இறுக்கினேன். சிறிது நேரத்தில் அவர் மூச்சுத் திணறி இறந்தார். இதையடுத்து அவரது கழுத்தில் கிடந்த நகைகளை எடுத்தேன். பின்னர், போலீசில் சிக்காமல் இருக்க அந்தோணி மேரி உடல் மீது மிளகாய் பொடி தூவிவிட்டு தப்பினேன். ராயபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1,30,000க்கு அடகு வைத்தேன். இவ்வாறு வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: