சட்டமன்ற நூற்றாண்டு விழா - கலைஞர் படம் திறப்பு விழா ஜனாதிபதிக்கு நேரில் அழைப்பு கொடுக்க தமிழக சபாநாயகர் இன்று டெல்லி பயணம்: தமிழக கவர்னருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி, டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார். அப்போது, ‘சென்னை மாகாணத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு தனித்தன்மையோடு செயல்பட்ட சட்டமன்றம் 12.1.1921 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.’ அதை நினைவுப்படுத்தும் வகையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த விழாவிற்கு தலைமை தாங்கி விழாவினை நடத்திட வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அந்த விழாவில், கலைஞர் திருவுருவப்படத்தை சட்டமன்ற வளாகத்திற்குள் திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.

மேலும், மதுரையில் கலைஞர் பெயரால் அமைய இருக்கக்கூடிய நூலக அடிக்கல் நாட்டு விழாவையும், சென்னை கிண்டியில் அமைய இருக்கும் அரசு பன்னோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, அதேபோல் சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை குறிக்கும் வகையில், சென்னை கடற்கரை சாலையில் நினைவுத்தூண் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி வைக்க வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வருகிற 2ம் தேதி (திங்கள்) காலை தமிழகம் வருகிறார்.

அன்று மாலை 5 மணிக்கு, சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்று சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் படத்தை திறந்து வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழக அரசு நடத்தும் இந்த விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை , நாளை காலை 11.30 மணிக்கு, குடியரசு தலைவரை அவரது டெல்லியில் உள்ள அவரது மாளிகையில் சந்தித்து விழா அழைப்பிதழை கொடுத்து, நேரில் அழைப்பார்.

முன்னதாக நேற்று காலை சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக சபாநாயகர் மு.அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர்  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விழா அழைப்பிதழை கொடுத்தனர். சட்டமன்ற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை, தலைமை செயலக வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தை சுற்றி புதிதாக சாலைகள் போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: