துவரம் பருப்பு இருப்பில் குளறுபடி ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்ட்: அமைச்சர் ஐ.பெரியசாமி நடவடிக்கை

சென்னை: நியாய விலை கடையில், துவரம் பருப்பு இருப்பு பேணுவதில் குறைபாடு இருந்ததால், ரேஷன் கடை ஊழியர் ஒருவரை அமைச்சர் ஐ.பெரியசாமி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்றும், நேற்று முன்தினமும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில நியாயவிலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளில் இருப்பு பரிசோதனை, அத்தியாவசிய பொருட்களின் தரம், துவரம் பருப்பு நகர்வு தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தார். ஜூன் திங்களில் கடைகளுக்கு துவரம் பருப்பு நகர்வு மேற்கொண்டதில், சுணக்கம் காணப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிந்தார். அப்பகுதி கடைகளில் 100 சதவீதம் ஆய்வு  செய்ய உத்தரவிட்டார். நேற்று வடசென்னை பகுதிகளில் இயங்கும், நியாயவிலை கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.  

அப்போது நாம்கோ பண்டகசாலையால் நடத்தப்படும் ஒரு நியாயவிலை கடையில் துவரம்பருப்பு இருப்பு பேணுவதில் குறைபாடு இருப்பதை கண்டறிந்து அதற்கு பொறுப்பான நியாயவிலை கடை பணியாளரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். நியாயவிலை கடைகளில், எப்போதும் அனைத்து பொருட்களும் இருப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும், அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து பொருட்களையும் வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும், புகார்களுக்கு இடமின்றி செயல்படுமாறும் நியாயவிலை கடை பணியாளர்களை அமைச்சர் அறிவுறுத்தினார். இதனை முறையாக கண்காணித்து பொதுவிநியோக திட்டத்தினை திறம்படச் செயல்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories:

>