வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!: த.வா.க. தலைவர் வேல்முருகன் பேட்டி..!!

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக முதலமைச்சருக்கு த.வா.க. தலைவர் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உரிமையை வழங்கி அரசாணை பிறப்பித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன். தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிட முன்னேற்ற கழகத்தோடு கூட்டணியில் இணைகின்ற போது தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதை ஏற்றுக்கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களின் கோரிக்கையான உள் ஒதுக்கீடை பரிசீலனை செய்வேன். ஆட்சிக்கு வந்த உடன் அதனை நடைமுறைப்படுத்துவேன் என்று அறிவித்திருந்தார். அதிமுக ஆட்சி தனது ஆட்சி அதிகாரத்தை இழக்கின்ற சில மணி நேரத்திற்கு முன்பாக ஒரு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை சட்டமாக்கி, வன்னியர்களின் தனி ஒதுக்கீட்டு கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றி தந்துவிட்டோம் என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த சட்ட மசோதாவால் ஒருவர் கூட பயன்பெறவில்லை.

ஆதலால் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தான் ஒரு கோரிக்கை விடுத்திருந்தேன். அதில், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்தி அந்தந்த சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கிடையில் தற்காலிக ஏற்பாடாக பல்வேறு வன்னியர் சமூகத்தினுடைய தலைவர்களும், அமைப்புகளும் உள்ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். அதனை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் பரிசீலனை செய்து நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

தற்போது அந்த வேண்டுகோள் தான் ஏற்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்று அறிவித்திருந்தார்கள். தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வருத்தங்கள் கலைகின்ற வகையில் 20 சதவீதம் எம்.பி.சி. ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கும், 7 சதவீதம் டி.என்.சி. பிரிவினருக்கும், மீதமுள்ள இரண்டரை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் வழங்கி இன்று முறையான அரசாணையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டேன் என்று வேல்முருகன் குறிப்பிட்டார்.

Related Stories: