அமைச்சர் துரைமுருகன், பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை வினியோகித்து ஊழல் நடவடிக்கைகள் மூலம் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையைவிட அதிகமாக செலவு செய்ததுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, சி.விஜயபாஸ்கரின் வெற்றி செல்லாது என்று  அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதேபோல், வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி எம்.எல்.ஏவான, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் வி.ராமு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,  வாக்கு எண்ணிக்கையின்போது தகுதியான தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் என்று கோரியிருந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து  திமுக சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு  உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், வாக்குப் பதிவு நாளில் மின்னணு வாக்குப்பதிவில் குறைபாடுகள் இருந்ததை சுட்டிக்காட்டினோம். அவற்றை நிவர்த்தி செய்யாமல் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தது. தொகுதிக்கு உட்பட்ட 81 மின்னணு இயந்திரங்களில் குறைபாடுகள் இருந்ததை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். எங்கள் கோரிக்கை நிராகரிப்பட்டது என்று கோரியிருந்தார். இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து அமைச்சர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார், இந்திய தேர்தல் ஆணையம்,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தொகுதி தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் 4  வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். தொகுதிக்கு உட்பட்ட 81 மின்னணு இயந்திரங்களில் குறைபாடுகள் இருந்ததை தேர்தல் அதிகாரியின்  கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

Related Stories: