இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 முக்கிய கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 முக்கிய கோயில்களில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களை புனரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோயில்களை தனியார் நிறுவனத்திடம் அளித்து, தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு  செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மருதமலை கோயிலில் வயது முதிர்ந்தோர் வசதிக்காக மின் தூக்கி அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கோயில்களில் கடந்த அதிமுக ஆட்சியில் 47 கோயில்கள் மட்டுமே பிரசித்தி பெற்ற கோயில்களாக கருதப்பட்டது. தற்போது 539 கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு, சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முக்கிய மலை கோயில்களான திருத்தணி,சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக  ‘‘ரோப் கார்” வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.

திருக்கோயில்களில் காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயனும் இன்றி தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் வைப்பு நிதியாக போடப்பட்டு அதில் வரும் வட்டி, கோயில் பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் புராதன சிலைகள் 2 அமெரிக்காவிலும், 1 சிங்கப்பூரிலும் இருக்கிறது. அவை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முறையாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 180 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: