ஆலங்குளம் அருகே மலையடிவாரப் பகுதியில் வனவிலங்குகளால் சோளப்பயிர்கள் சேதம்

ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே மலையடிவாரப் பகுதியில் வனவிலங்குகளால் சோளப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஒக்கநின்றான் மலைராமர் கோயில் வனப்பகுதியைச் சுற்றி மாயமான்குறிச்சி, குருவன்கோட்டை, துத்திகுளம், கல்லூத்து, அத்தியூத்து, ஆண்டிபட்டி, கரும்பனூர் என ஏராளமான கிராமங்கள் உள்ளன. இம்மலையின் அடிவார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நாட்டு சோளம் சாகுபடி செய்தனர். தற்போது சோளம் விளைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் அருகே ஒக்கநின்றான் மலையின் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள், மான்கள் இரவு நேரத்தில் விளைநிலங்களில் புகுந்து சோளப் பயிர்கள் மட்டுமின்றி, உளுந்து மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தி செல்கின்றன.

  இதே போல் துத்திகுளம் ஊருக்கு கீழ்புறம் உள்ள வயல்களில் நேற்று புகுந்த காட்டுப்பன்றிகள் சோளக்கதிர்களை தின்றும், பயிர்களை மிதித்து சேதபடுத்தியும் சென்றன. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சோளப்பயிர்கள் சேதமானது குறித்து வனத்துறையினரிடம் கேட்டால் வயல்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளே காவல் காத்து கொள்ள வேண்டும். வயல்களுக்குள் இறங்கும் விலங்குகளுக்கு உயிர் சேதம் ஏற்படுத்தக் கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது.

 இவ்வாறு இம்மலையை ஒட்டியுள்ள வயலைச் சேர்ந்த விவசாயிகள் அரிகிருஷ்ணன், ராஜன், பரமசிவன், அரிராமர், முருகன், ஆறுமுகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பயிரிட்டிருந்த சுமார் 12  ஏக்கருக்கும் மேலான சோளம், உளுந்து  பயிர்கள் காட்டுப் பன்றியால் சேதமடைந்துள்ளன. 1 ஏக்கர் சோள சாகுபடி மேற்கொள்ள ரூ.35 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் பயிர்கள் சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு காட்டுப்பன்றியால் சேதப்படுத்தப்பட்ட  சோளத்தை தவிர மீதமுள்ள பயிர்களை மயில்கள், மான்கள்  தின்று செல்லும் அவலமும் தொடர்கிறது. மேலும் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வன விலங்குகளால் சேதப்படுத்தப்படுவதை தவிர்க்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

 வனப்பகுதியில் விலங்குகளுக்காக குடிநீர், உணவு உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் செய்துதரப்படாததால் காட்டுபன்றிகள், மான்கள் உள்ளிட்டவை அருகேயுள்ள கிராமங்களைத் தேடி வரும் சூழ்நிலை உள்ளது. எனவே, இனியாவது வனத்துறை இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசைப் போல், காட்டுப்பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது இங்குள்ள வன விலங்குகளை வனத்துறை மூலம் இதர வனப்பகுதிகளுக்கு கொண்டு விட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது ‘‘காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த சோளப்பயிர்கள் குறித்து விவசாயிகள் தகவல் அளித்து உள்ளனர். இருப்பினும் பாதிப்பு விவரம் குறித்து சம்பந்தப்பட்ட விஏஒவிடம் அடங்கல், வேளாண் துறையிடம் சேத மதிப்பு, அத்துடன் பாதிக்கப்பட்ட வயலின் புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட அலுவலகத்தில் கொடுத்தால் அரசு நிர்ணயித்த சேத தொகை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: