கருமத்தம்பட்டியில் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட டிராவலர்ஸ் பங்களாவை புதுப்பிக்க கோரிக்கை

சோமனூர் : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் காவல் நிலையத்தின் அருகே உள்ள அரசு டிராவலர்ஸ் பங்களாவை புதுப்பிக்க வேண்டி சூலூர் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் 1928ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் சார்பில் இந்த டிராவலர்ஸ் பங்களா கட்டப்பட்டது.

சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டிடம் ஒரு பெரிய வரவேற்பறையும், 5  ஓய்வு அறைகளும் கழிப்பிட வசதியும், தனியாக உணவுக் கூடமும், பொது கழிப்பிட வசதியும், குடிநீர் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் அருகிலேயே 60 அடி ஆழத்தில் தடுப்புச்சுவருடன் கூடிய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் எடுப்பது சில காலம் முன்பு வரை வழக்கமாக இருந்துள்ளது.

பொதுமக்கள் அமர்வதற்கு தனியாக இருக்கைகளும், குழந்தைகள் விளையாட்டு பூங்காவும், பயணியர் விடுதியில் எதிரே தேசிய கொடிகொடிக்கம்பமும் அமைக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது செயல்பட்டு வந்த டிராவலர்ஸ் பங்களாவில் பொதுமக்கள் ஓய்வு எடுப்பதற்கு நட்சத்திர ஓட்டல்களைபோல மணிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டு அவிநாசி தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு வருவாய் ஈட்டித் தந்தது. இந்த மாளிகை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாததால் கட்டிடம் பாழடைந்து கிடக்கிறது.

கோவை மார்க்கமாக வரக்கூடிய  பொதுமக்கள் மட்டுமல்லாமல், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட உயர் அதிகாரிகளும்  இந்த மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கம். பழம்பெருமை வாய்ந்த இந்த கட்டிடம் கடந்த 70 ஆண்டுகளாக செயல்படாததால் பராமரிப்பின்றி பல்வேறு சமூக விரோத குற்றங்கள் தொடர்கதையாக உள்ளது. அதனை புதுப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: