செல்போன் உளவு பார்க்கப்பட்டதா? நாடாளுமன்ற தொடரில் பதில் சொல்ல வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘பெகாசஸ் உளவு நடந்ததா? இல்லையா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்’ என ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பெகாசஸ் உளவு விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிப்பதை விட நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரித்தால் இன்னும் வலுவாக இருக்கும். ஏனெனில், நிலைக்குழுவில் பாஜ எம்பி.க்களே அதிகம் உள்ளனர். நாடாளுமன்ற குழு விதிமுறைகள் மிகவும் கண்டிப்பானவை. அவர்களால் வெளிப்படையாக எந்த ஆதாரத்தையும் பெற முடியாது. ஆனால், கூட்டுக்குழுவை பொறுத்த வரையில், பொது வெளியில் இருந்து ஆதாரங்களை பெறவும், குறுக்கு விசாரணை செய்யவும், ஆவணங்களை வரவழைக்கவும் நாடாளுமன்றத்தால் அதிகாரம் வழங்க முடியும். எனவே, கூட்டுக்குழுவுக்கு நாடாளுமன்ற குழுவை காட்டிலும் அதிக அதிகாரம் இருப்பதாக நான் நம்புகிறேன். அதே சமயம் நிலைக்குழு விசாரிப்பது வரவேற்கத்தக்கது.

இந்த சட்டவிரோத உளவு பார்த்தலால்தான் 2019 தேர்தலில் பாஜ வென்றதாக ஒட்டு மொத்தமாக கூறி விட முடியாது என்றாலும், அதனால் ஆதாயம் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. சட்ட விரோத கண்காணிப்பு நடக்கவில்லை என்றே ஒன்றிய அமைச்சர் வைஷ்ணவ் கூறுகிறார். அப்படியென்றால் அதிகாரப்பூர்வ கண்காணிப்பு நடந்துள்ளதா என்பதே கேள்வி. பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்பட்டது என்றால் அதை வாங்கியது யார்? இது அரசே வாங்கியதா அல்லது எந்த புலனாய்வு அமைப்பு வாங்கியது? அரசு உளவு பார்க்கவில்லை என்றால், உளவு பார்த்தது யார்? இதற்கெல்லாம் அனைத்து புலனாய்வு துறைக்கும் தலைமை வகிக்கும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: