அஜய் மக்கான், கே.சி.வேணுகோபால் ராஜஸ்தானில் முகாம்; கெலாட், பைலட் ஆதரவாளர்களிடம் திடீர் ஆலோசனை: போர்க்கொடி தூக்கிய ஓராண்டுக்கு பின்னர் நடவடிக்கை

ஜெய்ப்பூர்: பஞ்சாப் காங்கிரசில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தானில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக கட்சியின் தலைமை குழு அங்கு விரைந்துள்ளது. வரும் ஓரிரு நாட்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அக்கட்சியின் இளம் தலைவர் சச்சின் பைலட் கடந்தாண்டு ஜூலையில் திடீரென போர்க்கொடி துாக்கினார். அவருக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் இருந்தனர். மாநிலத்தின் துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை இழந்த சச்சின் பைலட், கட்சித் தலைமையிடம் தனது நிலைபாடு குறித்த உறுதியை தெளிவுபடுத்தி இருந்தார்.

அதிருப்தியாளர்களை சமாளிக்கும் வகையில் அமைச்சரவையை விரிவுபடுத்தவும், நிர்வாகிகளை மாற்றி அமைக்கவும் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. கிட்டதிட்ட ஒரு வருடமாக நீடித்த உட்கட்சி பூசல் விவகாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான், பொது செயலாளார் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய குழு ராஜஸ்தான் விரைந்துள்ளது. இன்று இவர்கள், கட்சியின் எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் முதல்வர் அசோக் கெலாட்டிடம் ஆலோசிக்கின்றனர். முன்னதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டராசரா, ‘எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவில்லை, கட்சியின் நிர்வாகிகள் கூட்டம்தான் நடைபெறுகிறது’ என்றார்.

ஏற்கனவே, பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், தற்போது ராஜஸ்தான் காங்கிரசிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தற்போது, முதல்வர் கெலாட் உட்பட 21 பேர் அமைச்சர்களாக உள்ளனர். ஆனால், மாநிலத்தில் அதிகபட்சம் 30 பேரை அமைச்சர்க ளாக நியமிக்க வழிவகை உள்ளதால், மீதமுள்ள ஒன்பது பேரை யாரை நியமிப்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது. சச்சின் பைலட் ஆதரவாளர்கள், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரசுக்கு வந்த 6 எம்எல்ஏக்கள், 13 சுயேட்சைகள் என்று அமைச்சர்கள் பட்டியலில் பலர் போட்டி போடுகின்ணனர்.

காரணம், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர்கள், அமைச்சர் பதவி கேட்பதால் கெலாட் விருப்பத்தை பூர்த்தி செய்வதா? சச்சின் விருப்பத்தை பூர்த்தி செய்வதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியாகிலும், அடுத்த மாதம் கெலாட் அமைச்சரவை விரிவாக்கம், கட்சிக்குள் சில மாற்றங்கள் இருக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: