டெல்லியில் 8 மாதமாக போராட்டம்; விவசாயிகள் உயிரிழப்பு குறித்த தகவல் இல்லை: ஒன்றிய வேளாண் அமைச்சர் பதிலால் அதிர்ச்சி

புதுடெல்லி: கடந்த எட்டுமாத போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் அரசிடம் இல்லை என்று விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை கடந்த எட்டு மாதங்களாக நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்தும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு உள்ளதா? என்றும் மாநிலங்களவையில் எம்பிக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 11 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சட்டத்தின் பிரிவுகள் குறித்த பிரச்னைகளை விவசாயிகள் விவாதிக்க முன்வரவில்லை. முழுமையாக சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றே விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந்துள்ளது குறித்து எந்த ஆவணங்களும் அரசிடம் இல்லை’ என்று அதில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 8 மாத கால போராட்டத்தில் 550க்கும் மேலான விவசாயிகள் கடும் குளிரிலும், வெயிலிலும் உடல் நலம் பாதிக்கப்பட்டும், போராட்ட களத்தில் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகள் உயிரிழப்பு தகவல் இல்லை என்று ஒன்றிய அமைச்சரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories: