பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

கடையநல்லூர் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களிலும் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பொதுவெளியில் உள்ள திடல்களில் தொழுகை நடத்துவதற்கு காவல்துறை மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தங்கள் அருகிலுள்ள பள்ளிவாசல்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெருநாள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.

கடையநல்லூர், ரஹ்மானியாபுரம், மக்காநகர், மதினாநகர், தவ்ஹீத்நகர், இக்பால்நகர், மாவடிக்கால், திரிகூடபுரம் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி  பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் கொரோனாவிலிருந்து அனைவரையும் காப்பாற்ற பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான ஆடுகள், மாடுகளை அறுத்து இறைச்சிகளை உற்றார், உறவினர்கள், ஏழை எளியவர்கள், நண்பர்களுக்கு வழங்கினர்.

இதேபோல கடையநல்லூரில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை காலை 6.25 மணிக்கு நடந்தது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசலில் பஷீர் அஹ்மத் உமரியும், பாத்திமா நகர் தக்வா பள்ளிவாசலில் ஸைபுல்லாஹ் ஹாஜா பைஜியும், மஸ்ஜித் ரஹ்மான் சீனா பள்ளிவாசலில் கபீர்,மக்கா நகர் ஆயிஷா பள்ளிவாசலில் சேஹ் உஸ்மான் ஜலாலி, பேட்டை மஸ்ஜித் அக்ஸா பள்ளிவாசலில்  முஹிப்புல்லாஹ் உமரி ஆகியோர் தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கமும் நடத்தினர். இதில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் சேகுதுமான், செயலாளர் முஹம்மது காசிம் என்ற சின்ஷா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜபருல்லாஹ் பத்ரி, ரபீக் அஹ்மத், பாவா, அல்லா பிச்சை, கலந்தரி இப்ராஹிம் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.

அம்பை: கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜூம்மா பள்ளிவாசல் ஈத்கா திடலில் பக்ரீத் பண்டிகையையொட்டி  சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பள்ளிவாசல் இமாம் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உலக நன்மைக்காகவும், கொரோனா பெருந்தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விடுபட வேண்டி சிறப்பு துவா செய்தனர்.

இதேபோல் அம்பை ஜாமியா பள்ளிவாசல், கீழப்பள்ளிவாசல், கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல், சின்னப்பள்ளிவாசல், தெற்கு தெரு மதரசா, சத்திரம் தெரு பள்ளிவாசல், பட்டாரியர் தெரு பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும் அம்பை, கல்லிடை தவ்ஹீத் ஜமாத் திடல் தொழுகைகளிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் திரளாகப் பங்கேற்று சிறப்பு தொழுகை நடத்தி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து வீடுகளுக்கு சென்று ஆடு, மாடுகளை அறுத்து குர்பானியை நிறைவு செய்தனர், அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி தனிநபர் குர்பானிக்காக 1000க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும், கூட்டு குர்பானிக்காக 50க்கும் மேற்பட்ட மாடுகளும் அறுக்கப்பட்டு இறைச்சிகள் ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

புளியங்குடி:  புளியங்குடியில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மற்றும் தமுமுக சார்பில் நடந்த சிறப்பு தொழுகைக்கு ஜமாத் தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமை வகித்தார். தொழுகையை பள்ளியின் தலைமை இமாம் மவுலவி அப்துல்மஜீத் பைஜி நடத்தினார்கள். பெருநாள் சொற்பொழிவை தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர்  மவுலவி ஹுசைன் மன்பஈ ஆற்றினார்கள். இதில் ஜமாத் செயலாளர் அப்துல் மஜீத், பொருளாளர் மைதீன் பாதுசா இப்னு தைமியா இஸ்லாமிய மகளிர் கல்லூரி தாளாளர் முஹம்மது காஜா, முஹைதீன் தாருல் ஹிக்மா மதரஸா  பொறுப்பாளர் பஷிர்ஒலி, தமுமுக நகர தலைவர் செய்யதலி பாதுஷா, தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முகம்மதலி, துணைத்தலைவர் மைதீன், துணைச்செயலாளர் இக்பால், தமுமுக தென்மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் புளியங்குடி ஹமீது, மமக புளியங்குடி நகர செயலாளர் செய்யது, தமுமுக நகர செயலாளர் ஆட்டோ அலி, மமக இளைஞரணி மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, தமுமுக நகர துணைச் செயலாளர்கள் சமாதானியா சாகுல், முகைதீன் அப்துல்காதர், ஜமாத் செயற்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆண்களும், பெண்களும் தொழுகையில் பங்கேற்றனர்.

ஏர்வாடி: ஏர்வாடியில் முஸ்லிம் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏர்வாடி பைத்துஸ்ஸலாம் பள்ளிவாசல், 2வது தெரு ஜூம்மா பள்ளிவாசல், கட்டளை தெரு, லப்பை வளைவு தெரு, தவ்ஹீத் பள்ளிவாசல்களில் நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இமாம் தலைமையில் இஸ்லாமிய மக்கள் திரளாகப் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து ஆடு, மாடுகளை குர்பானியாக ஏழைகளுக்கு கொடுத்தனர்.தமுமுக சார்பில்  ஏர்வாடி அணைக்கரை சாலையில் உள்ள தஃவா திடலில் இஸ்லாமிய பிரசார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ தொழுகை நடத்தி தியாகத் திருநாளின் சிறப்புகளை விளக்கிப் பேசினார். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories: