தமிழகத்தில் அரசின் நடவடிக்கை காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் மத்தியபிரதேச மருத்துக்கல்வி துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் சந்தித்து தமிழகத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலை குறித்து மத்திய பிரதேச மருத்துவக்கல்வி துறை அமைச்சர் விஸ்வாஷ் கைலாஷ் சாரங் கேட்டறிந்தார். ஓமந்தூரார் மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார கட்டமைப்பை மத்திய பிரதேச மருத்துவக்கல்வி துறை அமைச்சர் பார்வையிடுகிறார்.

 இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 2 கோடியை நெருங்கி கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது 100 % உண்மை.மே 7ம் தேதி பொறுப்புக்கு வருகிறபோது 730 மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பு இருந்தது. அப்போது தொற்றின் எண்ணிக்கை 25,465 ஆக இருந்தது. அதன்பிறகு மே 21ம் தேதி 36,184 ஆக இருந்தது. அப்போது ஆக்சிஜன் தேவை 500 மெட்ரிக் டன் தேவையாக இருந்தது.

இதையடுத்து முதல்வர் ஒன்றிய அரசிடம் பேசி வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதன் விளைவாக தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை. மருத்துவ துறையில் ஒப்பந்தம் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

 கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு ஒப்பந்தம் அடிப்படையில் பணியில் உள்ளவர்கள், பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நேரடியாக நியமனங்கள் மட்டுமே தற்போது நடந்து வருகிறது. ஒப்பந்த பணியாளர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்றார்.

 மத்திய பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங்  கூறுகையில், ‘‘ தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ளது’’ என்றார்.

Related Stories: