தமிழகத்தில் 2017 முதல் 2021 வரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு முறையாக கூட்டப்படவில்லை: ஆண்டுக்கு சராசரியாக 25 கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது

திருச்சி: தமிழகத்தில் 2017 முதல் 2021 வரையிலான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு முறையாக கூட்டப்படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 25 கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறையின்கீழ் மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் செயல்பாடு தொடர்பாக கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உள்ளது. இந்த குழுவின் தலைவராக சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் செயல்படுவார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் துணை தலைவராக இருப்பார். மாவட்ட கலெக்டர் உறுப்பினர் செயலராக செயல்படுவார். இந்த குழுவின் கூட்டத்தில் மத்திய அரசின் 40க்கும் மேற்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும். இதன்படி 3 மாதத்திற்கு ஒரு கூட்டம் வீதம் ஆண்டுக்கு 4 முறை இந்த குழுவின் கூட்டம் நடைபெற வேண்டும்.

கடந்த 2020-2021ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் 28 கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் முதல் காலாண்டில் ஒரு கூட்டம் கூட நடைபெறவில்லை. 2வது காலாண்டில் 10 கூட்டமும், 3 காலாண்டில் 13 கூட்டமும், 4 வது காலாண்டில் 5 கூட்டமும் நடைபெற்றுள்ளது. 2019 - 2020ம் ஆண்டில் மொத்தம் 27 கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் முதல் மற்றும் 2 காலாண்டில் ஒரு கூட்டம் கூட நடைபெறவில்லை. 3-வது காலாண்டில் 10 கூட்டமும், 4-வது காலாண்டில் 17 கூட்டமும் நடைபெற்றுள்ளது. 2018 - 2019ம் ஆண்டில் மொத்தம் 26 கூட்டம் மட்டுமே நடைபெற்றுள்ளது. இதில் முதல் காலாண்டில் 11, 2-வது காலாண்டில் 7, 3-வது காலாண்டில் 6, 4-வது காலாண்டில் 2 கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. 2017 - 2018ம் ஆண்டில் முதல் காலாண்டில் 2, 3வது மற்றும் 4 வது காலாண்டில் 3 என்று மொத்தம் 8 கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது. சராசரியாக 25 கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளது.

* ஆண்டு கூட்டங்களின் எண்ணிக்கை....

ஆண்டு    எண்ணிக்கை

2017-2018    8

2018-2019    26

2019-2020    27

2020-2021    28

* கலெக்டர்தான் பொறுப்பு

மாவட்ட வளர்ச்சி மற்றும் காண்காணிப்பு குழுவின் உறுப்பினர் செயலாளராக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் செயல்பாடுவர்கள். இந்த குழுவின் கூட்டத்தை கூட்ட வேண்டிய பொறுப்பும் கலெக்டரிடம்தான் உள்ளது என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: