அமரீந்தர் சிங்குடன் மோதல் போக்கு; 62 எம்எல்ஏக்களுடன் சித்து ஆலோசனை: பஞ்சாப் காங்கிரசில் உச்சகட்ட பரபரப்பு

அமிர்தசரஸ்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், 62 எம்எல்ஏக்களுடன் காங். மாநில தலைவர் சித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அமரீந்தருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரை சமீபத்தில் சித்து சந்தித்துப் பேசி இருந்தார். அதேபோல் டெல்லி சென்ற அமரீந்தர் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  

இதற்கிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். ஆனால், அமரீந்தர் சிங் குறித்து விமர்சித்ததற்காக, அவரிடம் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, அமிர்தசரஸில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை 62 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ பர்கத் சிங் கூறுகையில், ‘சித்து ஏன் (முதல்வர்) மன்னிப்பு கேட்க வேண்டும்? இது ஒரு பொது பிரச்னை அல்ல.

முதல்வர் பல பிரச்னைகளை தீர்க்கவில்லை. அவர்தான் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். பஞ்சாப் காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், கட்சித் தலைமை கவலை அடைந்துள்ளது.

Related Stories: