தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக உயர்த்துவதே லட்சியம்: தொழிலதிபர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்துவதே திமுக அரசின் லட்சியம் என்று தொழிலதிபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில் துறை சார்பில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு” என்ற விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி அமைத்த 2 மாத காலத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த காலம் மிக துயரமான கொரோனா காலம். துணிச்சலான, துரிதமான நடவடிக்கைகளின் காரணமாக அதை வென்ற காலமாக மாற்றினோம். அடுத்து எதையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டதாக மாநிலத்தை மாற்றி இருக்கிறோம்.

கொரோனா தாக்கத்தின்போது மருத்துவ நெருக்கடியை மட்டுமல்ல, நிதி நெருக்கடியையும் நாங்கள் எதிர்கொண்டோம். அப்போது அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்தேன். அதனை ஏற்று இந்த இரண்டு மாத காலத்தில் ரூ.489.78 கோடி நிதி திரண்டுள்ளது. உலகத்தையே அச்சுறுத்திய இந்த கொரோனா காலத்திலும், கணிசமான முதலீடுகளை தமிழ்நாடு  ஈர்த்துள்ளது. தமிழக அரசின் அயராத முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை நான் பார்க்கிறேன். உலகளவில் உற்பத்தி துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்று இயங்க ஆரம்பித்துள்ளது. தற்போது, தெற்காசியாவிலேயே தொழில்புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உயர்த்துவதே திமுக அரசின் லட்சியம்.

2030க்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டினை உருவாக்குவதே, திமுக அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கி பயணிக்க, உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் நான் கோருகிறேன். முதலீட்டாளர்கள் தொழில் துவங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, தங்களது திட்டத்தினை விரைவாகவும், எளிதாகவும் நிறுவுவதற்கு  ஏற்ப மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளம் 2.0ஐ  இன்று துவங்கி வைத்துள்ளேன். தற்போதுள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி, புதிய முதலீட்டாளர்களுக்கும் உதவிடும் வகையில், 24 துறைகளின் 100 சேவைகள் கொண்ட, ஒரு மேம்படுத்தப்பட்ட ஒற்றைச் சாளர இணையதளமாக இது விளங்கும்.  இணைய முறையில் உங்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

உரிய துறைகளுக்கு அவை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். உரிய துறைகளுடன் காணொளி மூலமாக சந்திப்புகள் நடத்தப்படும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வாடிக்கையாளர்களுடன் உடனடி உரையாடல்கள் நடத்தப்படும். இந்த வசதிகள் அனைத்தும் இந்த ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 மூலமாக உங்களுக்கு கிடைக்கும். இதன் செயல்பாட்டினை நானே நேரடியாக  கண்காணிப்பேன். புதிய முதலீடுகளை பெருமளவு ஈர்க்க வேண்டும் என்பதுதான்  எங்களது முதல் இலக்கு. அதற்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை உருவாக்க  திட்டமிட்டுள்ளோம். அதாவது தமிழ்நாட்டில் தொழில் தொடங்க திட்டமிட்டதுடன் உங்களது சிந்தனை செயல்பாட்டுக்கு வரும். அத்தகைய சூழலை நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே தமிழ்நாடு அரசின் கதவுகள் திறக்கும் என்ற உறுதியை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.

தமிழ்நாட்டில் பொது உற்பத்தி, ஆட்டோமொபைல் உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தோல் பொருட்கள் உற்பத்தி ஆகியவை தொடர்ந்து நடந்துவரும் தொழில்களாக இருக்கின்றன. இந்த நிலையில் வளர்ந்து வரும் துறைகளான மின்வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள் மற்றும் காற்றாலை கலன்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்துறை புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் 4வது தொழில்துறை புரட்சி, நம் மாநிலத்திற்கு கிடைத்துள்ள ஓர் அரிய வாய்ப்பாகும்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களின் அனுபவங்களை எளிதாக்கவும் மேலும் இனிமையாக்கவும், ஏற்றுமதி கொள்கை, மருந்து பொருட்கள் மற்றும் உயிரிநுட்ப கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்க ஒரு கொள்கை என பல கொள்கைகளை வெளியிடவும் இந்த அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தரவுத்தளம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஏற்றுமதிக்கான பிரத்தியேக ஏற்றுமதிப்பிரிவு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளுடன் தொழில் உறவுகளை பலப்படுத்துதல் போன்ற பல முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில்கள் மிகப்பெரிய அளவில் பயனடையும்.

கலைஞர் அரசில், நான் தொழில்துறை அமைச்சராக இருந்த வேளையில்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யார் டிட்கோ நிறுவனத்தின் தொழிற்சாலையை திறந்து வைத்தேன். தற்போது அந்நிறுவனத்தில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள். புதிதாக திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடஸ்ரீர் விழுப்புரம், திருவண்ணாமலை என்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், புதிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன.அதிகப்படியான மூதலீடுகளை தாருங்கள். அதன் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களின் மனிதவளத்துக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்பை உறுதி செய்யுங்கள். இதன்மூலமாக தமிழ் சமூகத்தின் மேன்மைக்கு உங்களது பங்களிப்பை செய்யுங்கள் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் தொழில் துறையினருக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு எல்லையை தாண்டிய தொழில் நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

* கிருஷ்ணகிரி, திருப்பூரில் ரூ.500 கோடியில் வசதிகள்

சிப்காட் நிறுவனம் மூலமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள கெலவரப்பள்ளியில் 10 எம்எல்டி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க  திட்டமிடப்பட்டு, அது ஓராண்டிற்குள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், ஓசூரில் அமையப்பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்குத் தடையின்றி தாராளமாக தண்ணீர் வசதி கிடைத்திடும். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள, வல்லம் வடகால், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில், தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தின் அருகிலேயே வசிக்கும் வகையில், குடியிருப்பு வசதிகள் செய்து தருவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.500 கோடி அளவிலான தொழில் மேம்பாட்டு நிதி ஒன்றை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம், தொழில் பூங்காக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகள், புதிய  கண்டுபிடிப்புகளுக்கான புத்தாக்க மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், பொதுவான வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ள இயலும். இதற்கென, முதற்கட்டமாக, ரூ.95.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: