பொன்னை ஆற்றின் அணைக்கட்டு பகுதியில் மதகுகள் இல்லாததால் வீணாக செல்லும் தண்ணீர்-சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பொன்னை : பொன்னை ஆற்றின் அணைக்கட்டு பகுதியில் மதகுகள் இல்லாததால் வீணாக தண்ணீர் செல்கிறது. இதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னை அருகே அணைக்கட்டு பகுதியில் தடுப்பணை உள்ளது. அதில் பொன்னை ஆற்றில் வரும் மழைநீர் வெள்ளம் அந்த தடுப்பணை மூலம் நீரை தேக்கி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ஏரி, வசூர் ஏரி, பள்ளேரி ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள இளையநல்லூர் ஏரி, மேல்பாடி ஏரி, குகையநல்லூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு சென்றடையும். பின்னர் ஏரிகள் அனைத்தும் நிரம்பிய பின்னர் அணையின் மதகுகள் திறக்கப்படும்.

இந்நிலையில், பொன்னை பகுதியிலும், அதன் சுற்றுப்புற பகுதியான ஆந்திர மாநிலத்திலும், தற்போது மழை பெய்து வருவதால், பொன்னை ஆற்றில் மழைநீர் வெள்ளம் செல்கிறது.

மேலும், ஆற்றின் அணைக்கட்டு பகுதியில் உள்ள மதகுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதால், தண்ணீர் அணையில் தேங்காமல், வீணாக வெளியே செல்கிறது.  

இதேநிலை தொடர்ந்தால், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் வரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும் என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அணையின் கதவுகளை சீரமைத்து அப்பகுதி ஏரிகள் நிரம்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகல் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: