ஒன்றிய அரசின் தேசிய கடல் மீன்வள மசோதவை கண்டித்து தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு சார்பில், ஒன்றிய அரசு கொண்டு வர உள்ள ‘தேசிய கடல் மீன்வள மசோதா’வை கண்டித்து கருப்பு கொடி ஏந்தியும், படகுகளில் கருப்பு கொடி கட்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடந்தது. இதையடுத்து நிருபர்களை சந்தித்து கூட்டமைப்பினர் கூறியதாவது: தேசிய கடல் மீன்வள மசோதாவில், மீனவர்கள் கடலுக்கு செல்ல உரிமம் பெறவேண்டும், அந்த உரிமத்தை பரிசோதிக்க அதிகாரி நியமிக்கப்படுவார். கடலில் எந்த வலையை பயன்படுத்தவேண்டும் என அவர்தான் தெரிவிப்பார். மேலும், 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி சென்று மீன்பிடிக்கக்கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவால் மீனவர்கள் 12 நாட்டிக்கல் மைல் தூரத்தை தாண்டி சென்றால் அந்த அதிகாரி அபராதம் விதிப்பார். மக்களுக்கு புரதச்சத்து உள்ள கலப்படம் இல்லாத உணவை வழங்கும் எங்களை குற்ற பரம்பரையாக சித்தரிப்பதை எதிர்க்கிறோம். மசோதா மூலம் எந்த பகுதியிலும் எந்த நேரத்திலும் மீன்பிடி தடை கொண்டு வரப்படும் நிலை உள்ளது. ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி வருவாயை ஈட்டி தரும் மீனவர்களுக்கு எந்த வகையிலும் பயனில்லாத கருப்பு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. நாங்கள் கடலில் கால் வைப்பதை தடுத்தால் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Related Stories: