தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வாங்கி தருவதாக மோசடி

சென்னை: குறைந்த வட்டியில் வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக தமிழகம், ஆந்திரா, கேரளா மாநில மக்களிடம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். வங்கியில் இருந்து பேசுவது போன்று செல்போனில் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் இந்த வங்கியில் கடன் கிடைக்கும் என்று கூறி பொதுமக்களின் வங்கி இருப்பில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கும் என்று கூறி அவர்களுடைய வங்கி கணக்கில் இருக்கக்கூடிய அந்த பணத்தை கொள்ளையடிக்க கூடிய ஒரு நூதன சம்பவம் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது.

இதுபோன்ற ஒரு கும்பல் மீண்டும் கைவரிசை காட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருக்கக்கூடிய வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்தனர். அந்த கும்பல் டெல்லியில் செயல்படுவதால் உதவி ஆணையர் தலைமையில் ஒரு தனிப்படை டெல்லியில் முகாமிட்டிருந்தனர். கடந்த 10 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசோக் குமார், அவரது மனைவி காமாட்சி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த ராஜவேல் மற்றும் அபிஷேக் பால் இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பஜாஜ் பைனான்ஸ், வரலட்சுமி பைனான்ஸ், தமிழர் பைனான்ஸ் என்ற பெயர்களில் இவர்கள் பொதுமக்களை தொடர்புகொண்டு தொடந்து ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வசிக்கக்கூடிய மக்களிடம் இவர்கள் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர் என்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

நடைபாதையில் வசிக்கக்கூடிய முகவரி இல்லாத பொதுமக்களிடம் 500 முதல் 20,000 வரை பணம் கொடுத்துவிட்டு அவர்களுடைய ஆதாரங்களை பெற்று அதன் மூலமாக சிம் கார்டுகளையும் அவர்களின் பெயர்களில் வங்கி கணக்கையும் தொடங்கி இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இவர்களை கைது செய்து சென்னைக்கு கொண்டுவந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் இதே கும்பல் ஜியோ டவர் வைப்பதாக கூறி பல மோசடிகளை செய்திருப்பதாக போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து பின்னர் மீண்டும் காவலில் எடுத்து பல்வேறு மோசடிகள் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: