நான் ஒன்மேன் ஆர்மி.. யாரும் என்னை தொட முடியாது டேங்கர் லாரியை வெடிக்க வைத்து 500 பேரை கொல்வேன்: அம்பத்தூரில் துப்பாக்கி முனையில் கைதான ரவுடி கோழி அருளின் மிரட்டல் ஆடியோவால் பரபரப்பு

சென்னை:  டிஜிபி நினைத்தாலும், என்னை பிடிக்க முடியாது. டேங்கர் லாரியை வெடிக்க வைத்து 500 பேரைக் கொல்வேன் என வாட்ஸ் அப் மூலமாக ஆடியோவில் கொலை மிரட்டல் விடுத்த நெல்லை ரவுடி கோழி அருளை, போலீசார் அம்பத்தூரில் துப்பாக்கி முனையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டை, வேதக்கோயில் தெருவை சேர்ந்தவர் கோழி அருள்ராஜ் (47). பிரபல ரவுடி. இவர் மீது பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சுரண்டை, குரும்பூர், வடக்கு தூத்துக்குடி, எப்போதும் வென்றான், தாடிகொம்புகரூர் மற்றும் சென்னை எழும்பூர், விருகம்பாக்கம்,  உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 23 வழக்குகள் உள்ளன.

 இந்நிலையில் கடந்த 12ம் தேதி தாழையூத்து பகுதியை சேர்ந்த கான்ட்ராக்டர் கண்ணன் (35) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலியான குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியதுடன் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ரவுடி கோழி அருள்ராஜ் வாட்ஸ் அப்பில் பேசி நான்கு ஆடியோ வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு ஆடியோவில், ‘‘கோழி அருளுக்கு ஒரே போர்ஸ் தான். உங்களுக்கு டிஐஜி, எஸ்பி தலைமையில் ஸ்டிரைக்கிங் போர்ஸ் வரும். ஆனால், எனக்கு ஒரே ஒரு போர்ஸ் தான். ஒன் மேன் ஆர்மி போர்ஸ். என்னோட ஒன் மேன் போர்ஸுக்கு ஆயுதம் என்னென்னு தெரியுமா. அது கேஸ் டேங்கர் லாரி, ஆசிட் டேங்கர் லாரி.

எங்கே எதை கொளுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் செத்தாலும் கவலைப்படமாட்டேன். டேங்கர் லாரியோடு 500 பேரை கொன்று விட்டு தான் சாவேன்’’ என பேசியுள்ளார்.   தொடர்ந்து அவர் வெளியிட்ட ஆடியோக்களில், டிஜிபிக்கு சவால் விடும் வகையில் பேசியிருந்தார். அந்த ஆடியோவில் ‘போலீஸ் டிஜிபி நினைத்தால் கூட என்னை பிடிக்க முடியாது. காவல் துறையினர் எனது நண்பர்களாக இருந்தார்கள். இப்போது, அவர்கள் எனக்கே துரோகம் செய்கிறார்கள். காவல்துறையில் சாதி வெறி இருந்தால், அனைவரும் மாற்றி கொள்ளவும். இல்லாவிட்டால், நீங்கள் வீரப்பனை தேடியது போல், என்னை தேட வேண்டியது வரும்’ என்று பேசியுள்ளார். இதோடு மட்டுமல்லாமல், அவர் ஒரு குறிப்பிட்ட சாதியினரை கொல்வதாகவும் பேசி, கலவரத்தை தூண்டும் வகையில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அவர் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும் போலீசாருக்கு சவால் விடுத்திருந்தார்.

 இதனையடுத்து, திருநெல்வேலி எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடி அருள்ராஜை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில், சென்னை அருகே அம்பத்தூர், அத்திபட்டு, ரெட்டி தெருவில் உள்ள உறவினர் வீட்டில் அருள்ராஜ் பதுங்கி இருப்பது குறித்து தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னைக்கு நேற்று முன்தினம் விரைந்து வந்தனர். பின்னர், அவர்கள் அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜ் உதவியுடன் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ரவுடி அருள்ராஜை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விடிய, விடிய தீவிர விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் அருள்ராஜ் மீது 153(ஏ), 506(1) ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் அவரை நேற்று காலை அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

 கராத்தே செல்வினின் தீவிர ஆதரவாளரான கோழி அருள் மீது கடந்த 2012ல் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கிலும், கடந்த 2006ல் பசுபதிபாண்டியன் மனைவி ஜெசிந்தா பண்டியன் கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளியாவார். கடந்த 1997ல் சென்னை எழும்பூரில் கட்டத்துரை என்பவரின் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதை தவிர்த்து கோழி அருள் மீது  கடந்த 1995ல்  நெல்லை பெருமாள்புரத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு, ஒரு அடிதடி வழக்கு,  1996ல் பெருமாள்புரத்தில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கிலும் கைதானார். 1997ம் ஆண்டு திருவான்மியூரில் கொலை வழக்கு ஒன்றும், விருகம்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கொலை கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது 10 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாளையங்கோட்டை காவல் நிலையத்துறை உள்ள சரித்திர பதிவேட்டில் கோழி அருள் பெயர் உள்ளது.

 இந்த நிலையில் நெல்லையில் சாதிய வன்முறைகளில் ஈடுபடும் ரவுடிகள் குறித்த பட்டியல் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெறப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், கலக்கமடைந்த ரவுடிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் வெளி மாவட்ட ரவுடிகள் சென்னையில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சென்னையில் ஏ பிரிவில் உள்ள ரவுடிகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

யார் இந்த கோழி அருள்?

கோழி அருளின் அண்ணன் பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியில் கோழிக்கடை வைத்திருந்தார். அந்த பகுதியில், அருள் சிறிய தாதாவாக உலா வந்தார். ஆரம்பத்தில் அடிதடியில் ஈடுபட்டு வந்தார். இவர், தன்னை வித்தியாசப்படுத்திக் காட்ட, ‘கோழி’ என்ற அடைமொழியை சேர்த்துக்கொண்டார்.

அடிக்கடி ‘கெட்டப்’ மாற்றம்

கோழி அருள் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை பல முறை கொலை செய்ய எதிரிகள் முயற்சி செய்தனர். இதனால், பயந்து போன கோழி அருள் நெல்லை பக்கம் செல்வதையே தவிர்த்து வந்தார். அவர் சென்னையில் கூட ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு இடமாக மாறி கொண்டே இருந்தார். அடிக்கடி தன்னுடைய தோற்றத்தையும் மாற்றிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

Related Stories: