பல கோடி நிலம் அபகரிப்பு; பக்கவாத கணவருடன் ஆம்புலன்சில் வந்து புகார் அளித்த மனைவி: ஆவடி துணை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு

திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூரில் பல கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட கணவருடன் மனைவி ஆம்புலன்சில் வந்து ஆவடி போலீஸ் துணை கமிஷனருக்கு புகார் அளித்தார். திருத்தணி, ஸ்வால் பேட்டையை சேர்ந்தவர் பொன்னுவேல் (55) லாரி டிரைவர். மனைவி லட்சுமி (50). கடந்த 2009, பிப்ரவரி முதல் பொன்னுவேல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று காலை லட்சுமி, பொன்னுவேலுடன் ஆவடி உள்ள துணை கமிஷனர் மகேஷ்குமார் அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் வந்து அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பொன்னுவேல் குடும்பத்தினருக்கு திருநின்றவூர் பகுதியில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இதில், எங்களது ஒரு ஏக்கர் 6 சென்ட்  நிலத்தை தனியார் பள்ளியின் உரிமையாளர் கண்ணன் என்பவர் அபகரித்து கொண்டார். தட்டி கேட்ட என்னை மிரட்டுகிறார். மேலும், அதே பகுதியில், எனது கணவருக்கு குடும்பத்தினருக்கு சொந்தமான 44 சென்ட் காலி நிலத்தை ராஜ ராஜேஸ்வரி என்பவர் பொய்யான பத்திரம் மூலமும், சட்டத்திற்கு புறம்பாக பத்திரப்பதிவும் செய்து கொண்டார். மேலும் அவர் ஒரு வருடம் கழித்து திருத்தல் பத்திரம் மூலமாக எனது கணவர் பெயரில் உள்ள இடத்தை அபகரித்து கொண்டார். தற்போதும் அந்த இடம், எனக்கு கணவர் பொன்னுவெல் பெயரில்தான் வருவாய் துறை பதிவேட்டில் உள்ளது.

இதனை சர்வேயர் மூலம் இடத்தை அளக்க விடாமலும், இடத்தை தர முடியாது என தகராறு செய்து, எங்களை மிரட்டி அனுப்பி விட்டனர். எங்களது பல கோடி ரூபாய் நிலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்ணன், ராஜராஜேஸ்வரி, சிவானந்தம் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டு கொடுங்கள். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். புகாரை பெற்ற துணை கமிஷனர் மகேஷ், விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ‘

Related Stories: