காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவேன்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிடிவாதம்..!

டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிடிவாதமாக உள்ளார். கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று மாலை 6 மணிக்கு சந்திக்க திட்டமிட்டிருந்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க வந்துள்ள எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவேன். காவிரியில் அணை கட்டுவது கர்நாடக மாநிலத்தின் உரிமை. எந்த மாநிலம் எதிர்த்தாலும், அதைப்பற்றி கர்நாடகா கவலைப்படாது. கர்நாடகம் அணை கட்டுவதை தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகின்றன. மேகதாது அணையை பொறுத்தவரை மற்ற மாநிலங்களின் எதிர்ப்பை பொருட்படுத்த மாட்டோம். மேகதாது விவகாரத்தில் அண்டை மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் மேகதாது அணைக்கு அனுமதி கேட்பதற்காக பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன் என கூறினார்.

முன்னதாக தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் இன்று ஒன்றிய நிதியமைச்சரை சந்தித்து பேசினர். அப்போது மேகதாதுவில் அணை சாத்தியம் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அனைத்துக்கட்சி குழுவிடம் கூறியிருந்தார். ஒன்றிய அமைச்சர் உறுதிக்கு மாறாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: