பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் நகராட்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு-கேரள வியாபாரிகள் குவிந்தனர்

பொள்ளாச்சி :  பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் நேற்று நடந்த  நகராட்சி சந்தையில் மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் குவிந்தனர்.பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும். நேற்று நடந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநில பகுதியிலிருந்தும் மாடுகள் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

சுமார் 2,500க்கும் மேற்பட்ட மாடுகள் குவிக்கப்பட்டதால், சந்தை பரபரப்புடன் இருந்தது. வரும் 21ம் தேதி பக்ரீத் பண்டியையொட்டி மாடுகளை வாங்க, கேரள வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்ததால், மாடுகளின் விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது.

 அதிகாலை முதல் நடைபெற்ற மாட்டு விற்பனையின்போது, கொட்டும் மழையில் வியாபாரிகள் பலர் மாடுகளை குறிப்பிட்ட விலைகளை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இதில் கன்றுக்குட்டிகள் ரூ.15 ஆயிரம் வரையிலும், எருமை மற்றும் காளை மாடுகள் ரூ.28 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.30 ஆயிரம் வரையிலும், ஆந்திரா மாடுகள் ரூ.38 ஆயிரம் வரையிலும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: