மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த ஒன்றிய அரசு திட்டம்..!!

டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என கர்நாடகா கூறி வரும் நிலையில் ஒன்றிய அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது. மேகதாது அணையை எவ்வாறேனும் கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. அதேநேரத்தில் தமிழக அரசானது இந்த அணையை எவ்விதத்திலும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 4 மாநில முதல்வர்களுடன் ஒன்றிய அரசு விரைவில் பேசவிருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா மாநில முதல்வர்களுடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆலோசனை நடத்தவிருக்கிறார். இதற்கான அழைப்பானது முறைப்படி அவர்களுக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சந்திப்பானது காணொலி காட்சி வாயிலாக அல்லாமல் நேரடியாகவே 4 மாநில முதல்வர்களையும் அழைத்து முறைப்படி பேச ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் திட்டமிட்டிருக்கிறார்.

கொரோனா பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கான வரைமுறை எவ்வாறு உள்ளது என்பது பொறுத்து விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்ற பிறகு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அடுத்தகட்ட அனுமதி வழங்குவதற்கு அடிப்படை விஷயங்கள் தொடரும் என கருதப்படுகிறது.

Related Stories: