திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம்-மனுக்களை பெட்டியில் செலுத்திவிட்டு சென்றனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோரிக்கை மனுக்களை பெட்டியில் செலுத்திவிட்டு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பஸ் போக்குவரத்து தொடங்கி இருப்பதால், கடந்த இரண்டு வாரங்களாக கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க பொதுமக்கள் வருவது அதிகரித்துள்ளது, அதன்படி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் உடன் வந்திருந்தனர்.

ஆனால், குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால்  அதிகாரிகள் மனுக்களை பெறவில்லை.

எனவே, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.இந்நிலையில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்துவிட்டு அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர் முருகேஷிடம், அலுவலக நுழைவு வாயிலில் காத்திருந்த பொதுமக்கள் சிலர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும், குறைதீர்வு கூட்டம் மீண்டும் தொடங்கும் வரை நேரில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதேபோல், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுடன் வந்திருந்தனர்.அங்கு வழக்கம் போல் நடைபெறும் மருத்துவ முகாம் போன்றவை நடைபெறவில்லை. எனவே, மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை பெற முடியாமல் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைந்தனர்.மேலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இனி வரும் வாரங்களில் சமூக இடைவெளியுடன் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் பெறவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: