புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கோரி இந்திராநகர் மக்கள் போராட்டம்

பரமக்குடி : பரமக்குடியில் குறைந்த மின் அழுத்த பிரச்சனையை தீர்க்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி கிராமமக்கள் போராட்டம் நடத்தினர். பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சி இந்திராநகர் காலனி பகுதியில் 300 வீடுகள் உள்ளன. இங்கு கடந்த 3 ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த மின்சாரம் வாழங்கப்படுவதால் வீடுகளிலுள்ள டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏசி போன்றவை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனுக்கள் அளித்தும் இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது.

ஆகவே அதை சரி செய்ய வலியுறுத்தி இந்திரா நகர் காலனி பழனிச்சாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் பத்து தினங்களுக்குள் இந்திராநகருக்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து சீரான முறையில் மின் விநியோகம் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: