பவானி தொகுதியில் 136 நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் சேர்ந்ததால் குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் அதிமுக மாஜி அமைச்சர் சிறப்பு பூஜை

சின்னமனூர்: ஈரோடு மாவட்டம், பவானி தொகுதி மாஜி எம்எல்ஏவும், அதிமுக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவருமான கே.சி.கருப்பண்ணன், தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே, குச்சனூரில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலில் நேற்று மதியம் தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். பகல் 2.30 மணியளவில் நடந்த உச்சிகால பூஜையின்போது, மூலஸ்தானம் அருகே மனைவியுடன் தரையில் அமர்ந்து தரிசனம் செய்தார். அப்போது தனது கல்வி நிறுவனங்கள் பெயரில் பூஜை செய்ததாக கூறப்படுகிறது. தரிசனம் முடிந்த பின், உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியில் உள்ள அதிமுக மாஜி எம்எல்ஏ ராமராஜ் வீட்டுக்கு சென்றார். அதிமுக மாஜி அமைச்சர் திடீரென குச்சனூர் கோயிலில் தரிசனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மனக்குழப்பம் தீர தரிசனமா?

ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த கே.சி.கருப்பண்ணன், சசிகலாவின் தீவிர விசுவாசியாக இருந்தார். பின்னர் எடப்பாடி அமைச்சரவையிலும் அமைச்சராக தொடர்ந்தார். அதிமுகவில் தற்போது இரட்டை தலைமையால் மோதல் அதிகரித்துள்ளது. சசிகலாவும் அதிமுகவை கைப்பற்ற அவ்வப்போது நிர்வாகிகளிடம் போனில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், யார் பக்கம் சாய்வது என்ற மனக்குழப்பத்தில் கே.சி.கருப்பண்ணன் இருப்பதாகவும், அதை தீர்க்க கோயிலில் வந்து வேண்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்துக்கும், கருப்பண்ணனுக்கும் இடையே கடுமையான பணி போர் நீடித்து வந்தது. இதனால் இவரும், ெசங்கோட்டையனும் சேர்ந்து தோப்பு வெங்கடாச்சலத்துக்கு சீட் கொடுக்காமல் தடுத்தனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த தோப்பு வெங்கடாச்சலம் நேற்று திமுகவில் சேர்ந்தார். அவருடன் 906 அதிமுக நிர்வாகிகள் சேர்ந்தனர். ஆனால் அதில் 136 பேர் கருப்பண்ணனின் பவானி தொகுதியைச் சேர்ந்தவர்கள். பவானி தொகுதியில் கூண்டோடு விலகிவிட்டனர். இதனால் அதிருப்பியடைந்திருந்த கருப்பண்ணன், என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம். அந்த அதிருப்தியில்தான் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: