கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பெல்லம்பள்ளி பகுதியில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது ஒரு கல்வெட்டினை கண்டறிந்தனர். 12 அடி உயரமுள்ள பாறைக்குன்றின் கிழக்கு பக்கத்தில், அந்த கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வரதய்ய நாயக்கர் என்பவர் இப்பகுதியை ஆண்டபோது, அவர் ஒரு ஏரியைக் கட்டியதற்காக வெண்ணையாழ்வர் காமிண்டருக்கு தண்டிகை சீவிதமாக நிலம் வழங்கிய தானக் கல்வெட்டு இது. தண்டிகை சீவிதம் என்பது பல்லக்கு வைத்து கொள்வதற்கும், அதனை பயன்படுத்துவதற்கும் வழங்கப்பட்ட வரி நீக்கிய நில தானமாகும். இந்த வகை தானத்தை குறிக்கும் கல்வெட்டு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த வளைக்காரன்பட்டியிலும் உள்ளது. இக்கல்வெட்டில் வரும் விழாப்பள்ளி என்னும் ஊர் தற்போது மருவி பெல்லம்பள்ளி என்றழைக்கப்படுகிறது,’’ என்றார்.

Related Stories: