கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பாய்லர் வெடித்து வடமாநில வாலிபர்கள் பரிதாப பலி

சென்னை: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு குறிப்பாக இரும்பு உருக்காலை, மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வின்றி வடமாநில வாலிபர்கள் கொத்தடிமைபோல் வேலை பார்த்து வருகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட தொழில் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் போவதால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பழைய டயர்களை எரித்து அதிலிருந்து பவுடர், கம்பி மற்றும் ரசாயன எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 10க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் நேற்று பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வழக்கம்போல் பணியில் ஈடுபட்ட 5க்கும் மேற்பட்டோர் பழைய டயர்களை அறுத்து பாய்லரில் போட்டுள்ளனர். இந்த பாய்லர் சுமார் 30 டிகிரி செல்சியஸ் கொதிகலனில் எரிந்து கொண்டிருக்கும்போது போதிய விழிப்புணர்வு இல்லாமல் வடமாநில வாலிபர்கள் திடீரென அதைத் திறந்ததால் பாய்லர் வெடித்து சிதறியது. அப்போது, சம்பவ இடத்திலேயே 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து உயிரிழந்தனர். மேலும், 3 பேர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, சிப்காட் போலீசார் விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த குந்தன் பொக்கரி(21), ஜிதேந்திரா(32) ஆகியோர் எனவும், மேலும், சிகிச்சை பெற்று வருபவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வித்தூர்(18), சாய்(19), விதுன்யா(21) ஆகியோர் எனவும் தெரியவந்தது. பின்னர், சம்பவ இடத்திற்கு வட்டாட்சியருக்கு மகேஷ், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: