பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பார் தமிழகத்தில் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிகள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

நெல்லை: நெல்லை ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 13.50 கோடி மதிப்பீட்டில் கல்வி கட்டிடம், மாணவ -மாணவிகளுக்கான கூடுதல் விடுதி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இந்த புதிய கல்லூரிகள் மூலம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

கால்நடை துறையில் தமிழகம் முழுவதும் இருக்கும் காலிப்பணியிடங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று காலமாக இருப்பதால், முதல்வரின் ஒப்புதலை பெற்று காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆட்டம்மை நோய் இந்த காலத்தில் ஆடுகளை தாக்கக் கூடும் என்பதை முன்பே அறிந்து பல்வேறு இடங்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் இறப்பு நிகழாமல் தடுக்க தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: