கசப்பு மருந்து கொடுத்த காஸ் விலை உயர்வு எகிறியது பால்கோவா விலை: கிலோவுக்கு 20 முதல் 40 வரை அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர்: காஸ் விலை உயர்வால் திருவில்லிபுத்தூரில் பால்கோவா விலை கிலோவுக்கு 20ம், பால் ஸ்வீட்களின் விலை கிலோவுக்கு 40ம் விலை உயர்ந்துள்ளது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும் சுவை மிகுந்த பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்களுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களிலும் சிறந்த வரவேற்பு இருக்கும். இந்நிலையில், ஒன்றிய அரசு காஸ் விலையை உயர்த்தியுள்ளதால், பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கிலோ 280க்கு விற்ற பால்கோவா தற்போது 20 விலை உயர்ந்து 300 ஆக விற்பனையாகிறது. பால் ஸ்வீட்ஸ் விலை 40 உயர்ந்து கிலோ 360லிருந்து 400க்கு விற்கப்படுகிறது.

திருவில்லிபுத்தூரில் பால்கோவா தயாரிப்பாளர் ஒருவர் கூறுகையில்,  “பால்கோவாவை முன்பு விறகு அடுப்பில் தயாரித்து வந்தோம். தற்போது தேவை அதிகரிப்பால், காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி, இயந்திரங்கள் மூலம் பால்கோவா தயாரித்து வருகிறோம். இதனால், அதிகமாக தயாரித்து, அதிக வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடிகிறது. காஸ் விலை உயர்வால், பால்கோவா விலையை கிலோவுக்கு 20 உயர்த்தியுள்ளோம். 70க்கு விற்ற கால் கிலோ பால்கோவா 75க்கும், 140 விற்ற அரை கிலோ பால்கோவா 150க்கும், 280க்கு விற்ற ஒரு கிலோ 300க்கும் விற்கப்படுகிறது. இதேபோல, கிலோ 360க்கு விற்ற பால் அல்வா, கேரட் பால்கோவா, பால் கேக், மில்க் ஸ்வீட்டுகள் ஆகிய பால் ஸ்வீட்கள் 40 விலை உயர்ந்து, 400க்கு விற்கப்படுகிறது” என்றார்.

Related Stories: