மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச தொழிற்பயிற்சி விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பித்து பயிற்சியில் சேரலாம் : ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அறிக்கை: சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் சென்னை  மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில்  முன்னுரிமை அளித்து, மீதி  காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவச பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பஸ் பாஸ் மற்றும் பயிற்சி  காலத்தில் மாதந்தோறும் ₹500 பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படுகின்றது. மேலும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு அரசாணையின்படி விலையில்லாமல் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

2021-2022ம் கல்வி ஆண்டிற்கு தொழிற் பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவத்தினை சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து சமர்பித்து நேரடியாக சேர்க்கையினை பெறலாம். மேலும் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள முகவரி www.chennaicorporation.gov.in அல்லது தொழிற் பயிற்சி நிலைய இணையதள முகவரி gccapp.chennicorporation.gov.in/cciti/ மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை ராயப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தின் கீழ்க்காணும் முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து சேர்க்கையினை பெறலாம். சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி,  ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, சென்னை-14, தொலைபேசி  எண் 044-28473117. 2021-2022ம் கல்வி ஆண்டிற்கான இலவச  தொழிற் பயிற்சியில் மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: