கொரோனா பரவல் குறையவில்லை: தளர்வுகளை அறிவிக்கும் ஒவ்வொரு நாடும் கவனத்துடன் கையாள வேண்டும்..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மாஸ்கோ: கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது.  

இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. தற்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன் கூறுகையில்; உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் குறையவில்லை. சில நாடுகளில் உயர்ந்து வருகிறது.

எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. மேலும், 9300 பேர் பலியாகியுள்ளனர்.  கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு டெல்டா வகையைச் சேர்ந்த வைரஸே காரணம். வைரஸ் பரவலை தடுக்கக்கூடியது தடுப்பூசி மட்டுமே. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்துவது ஆமை வேகத்தில் நடக்கிறது. எனவே தற்போதைய சூழலில் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் கட்டுப்பாடுகள் மட்டுமே பயனளிக்கிறது.  எனவே கொரோனா தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடுகள் கவனத்துடன் கையாள வேண்டும்” என்றார்.

Related Stories: