கோவை - பாலக்காடு வனப்பகுதியில் ரயில்பாதையில் யானைகள் பலியை தடுக்க வேண்டும்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: கோவை - பாலக்காடு ரயில்வே பாதையில் யானைகள் பலியாவதை தடுக்க வனத்துறை, ரயில்வே ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கோவை - பாலக்காடு வனப்பகுதி எல்லையில் உள்ள ரயில்வே பாதையில் யானைகள் இறப்பு அதிகரிப்பது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தது. பத்திரிகையில் வந்த செய்தியில், ‘கடந்த 5 ஆண்டுகளில் கோவை - பாலக்காடு ரயில்வே பாதையில் மட்டும் 7 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன. யானைகள் வழித்தடத்தில் ரயில்பாதை அமைந்துள்ளதால், அடிக்கடி யானைகள் இறப்பது வாடிக்கையாகிவிட்டது. எனவே, யானைகள் இறப்பை தடுக்க வனத்துறை, ரயில்வே துறை, ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாய ஆணையர் ஏ.கே.கோயல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ‘கோவை - பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க வனத்துறை - ரயில்வே துறை ஒருங்கிணைந்து வாட்ஸ்அப் குழு உருவாக்கி தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். விபத்து நடக்கும் குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைக்க வேண்டும். ஒளிரும் பலகைகள், யானைகள் குடிப்பதற்கான தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட வசதிகளை 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும்.  அப்போதுதான் யானைகள் ரயில்பாதையை கடப்பதை தவிர்க்க முடியும்’ என்று வாதிட்டார். அப்போது வனத்துறை, ரயில்வே துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழக அரசு அளித்த பரிந்துரைகளை ஏற்று, யானைகள் இறப்பை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கப்படும்’ என்று கூறினர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த ஆணையர் ஏ.கே.கோயல், ‘தமிழக அரசு பரிந்துரைத்த முன்னெச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளை ரயில்வே, வனத்துறையினர் உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

Related Stories: